×

விசாரணை என்ற பெயரில் ஊடகங்களால் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: தலைமை நீதிபதி ரமணா பரபரப்பு பேச்சு

ராஞ்சி: ‘ஊடகங்களால் நடத்தப்படும் கட்டப் பஞ்சாயத்துகள் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார்.  ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நீதிபதி சத்ய பிரதா சின்ஹாவின் நினைவாக நடத்தப்பட்ட விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்றார். இதில் அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது: வழக்குகளை தீர்ப்பதில் ஊடக விசாரணைகள் வழிகாட்டும் காரணியாக இருக்க  முடியாது. அனுபவமுள்ள நீதிபதிகள் கூட முடிவு எடுப்பதில் சிரமம் உள்ள  பிரச்னைகளில் சில நேரங்களில் ஊடகங்கள் நடத்தும் கட்டப் பஞ்சாயத்துகளை நாங்கள் காண்கிறோம். இது,  ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். ஊடகங்களால் பரப்பப்படும்  பாரபட்சமான கருத்துக்கள் மக்களை பாதிக்கின்றன. ஜனநாயகத்தை  பலவீனப்படுத்துகின்றன. அரசு அமைப்புக்கு தீங்கு விளைவிக்கின்றன. ஊடகங்களின் விசாரணைகள் நீதித்துறையின் நியாயமான செயல்பாடுகளையும், சுதந்திரத்தையும் பாதிக்கின்றன. இதனால், நீதி வழங்கப்படுவது மோசமாக பாதிக்கப்படுகிறது.  உங்கள்  கடமைகளை மீறுவதன் மூலம், எங்கள் ஜனநாயகத்தை இரண்டு படிகள் பின்னோக்கி  கொண்டு செல்கிறீர்கள். அச்சு ஊடகங்கள் இன்னும் குறிப்பிட்ட அளவுக்கு பொறுப்புணர்வைக் கொண்டிருக்கின்றன. மின்னணு ஊடகங்களுக்கு பூஜ்ய  பொறுப்புணர்வுதான் உள்ளது. சில நேரங்களில், ஊடகங்களில், குறிப்பாக சமூக  ஊடகங்களில், நீதிபதிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.  அடிக்கடி நடக்கும் அத்துமீறல்கள், அதன் விளைவாக ஏற்படும் சமூக அமைதியின்மை  காரணமாக, கடுமையான ஊடக விதிமுறைகளை வகுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதோடு, பிரச்னைகளுக்கு பொறுப்பேற்க கூடிய கடமையும் ஊடங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். நீதிபதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகமாகி வருகிறது. அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அரசியல்வாதிகளை போலவோ ,   பதவிக்காலம் முடிந்த மக்கள் பிரதிநிதிகளை போலவோ பாதுகாப்பு அளிக்கப்படுவது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்….

The post விசாரணை என்ற பெயரில் ஊடகங்களால் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: தலைமை நீதிபதி ரமணா பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : katpanchayats ,Chief Justice ,Ramana ,Ranchi ,Katta Panchayats ,Supreme Court ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விதிகளை வகுக்க பரிந்துரை!